Monday, 4 March 2013

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்- 1

திருச்செங்கோடு, ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். அதன் தல புராணம் மிகவும் பிரசித்தம். திருச்செங்கோட்டின் மலை மீது இருந்து ஆட்சி புரிபவர்கள் இருவர். அப்பனும், மகனும் தான். அப்பன் அர்த்தநாரீஸ்வரர், மகன் வேலவன். அப்பனும், அம்மையும் ஒரே உருவில் காட்சியளிக்கும் இடம் அது. ஆனால், கீழே கைலாசநாதரின் கொடி பறக்கிறது. மலை ஏறும் முன், நீங்கள் கீழே உள்ள ஆறுமுக சாமியை தரிசித்து விட்டு தான் போக வேண்டும்.
அன்று இந்த ஊர் மிகவும் சிறியது. ஆனால், இன்று நாகரிகம் வளர்ந்து விட்ட நிலையில், ஊரும் தன்னை விருத்தி செய்து கொண்டது.சென்ற நூற்றாண்டில், இந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ராஜாஜி, சுப்பராயன் மற்றும் ராமலிங்க முதலியார் ஆகியோர் தான். காந்தி ஆசிரமத்தை நிறுவியதால், ராஜாஜியும், அரசியலால் சுப்பராயனும் பெயர் பெற்றனர். தன் வியாபார திறமையால், ராமலிங்க முதலியார் பேசப்பட்டார்.
அந்த ஊரில் இருந்து கொண்டே திருப்பூர், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் என்று, பல ஊர்களில் கடைகளை வைத்து, மில்களில் இருந்து நேரடியாக நூல் வாங்கி, மொத்த வியாபாரம் செய்தார்."வி.வி.சி.ராமலிங்க முதலியார் சன்ஸ்' என்பது அவரது நிறுவனத்தின் பெயர்.
ஒழுங்கு, நேர்மை, தெய்வபக்தி, நாணயம் இவை அவரது வியாபாரத்தின் மூல மந்திரம். வி.வி.சி.ஆர்., என்றாலே, எழுந்து நின்று மரியாதை கொடுத்த பெயர் அது.
அந்த வள்ளல் பெற்றெடுத்த மக்கள் ஐவர். முதல் மகன் சிறுவயதிலேயே அதாவது, தம் 48 வயதிலேயே இறந்து விட்டார்.அவரது பெயர் கந்தப்ப முதலியார். உயிரோடு இருந்தவரை, அவர் தம் தந்தையுடன் நூல் வியாபாரத்தில் தான் ஈடுபட்டிருந்தார்.வீட்டில் இவருக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு அதிகம்.இன்னொருவர், சின்னப்ப முதலியார். அவரும் இளம் வயதி@ல@ய இயற்கை எய்தி விட்டார். அவருக்கு இளையவர், வையாபுரி முதலியார். திருச்செங்கோட்டில், "புள்ளிகார் மில்ஸ்' என்ற புகழ்பெற்ற நூற்பு ஆலையை நிறுவி, ஏராளமான குடும்பங்களுக்கு உதவியவர்.
அவருக்கு இளையவர் தான், சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.
அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் அவர் நிர்வாக அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். திருத்தணியில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை.
அப்படிப்பட்ட உத்தமரின் தம்பி தான் டி.ஆர்.சுந்தரம். வி.வி.சி.ஆர். ராமலிங்க முதலியாரின் ஐந்தாவது மகன். ஜூலை, 16, 1907ல், திருச்செங்கோட்டில் பிறந்தார்.
டி.ஆர்.எஸ்., தன் இளமைக் காலத்தை திருச்செங்கோட்டில் கழித்தாலும், பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். படிப்பில் எப்போதுமே அவர் சோடை போனதில்லை. புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் ஆராய்ந்து அறியும் எண்ணம் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். சென்னையில், அவர் பிரசிடென்சி கல்லூரியில், பி.ஏ., படிப்புக்காக சேர்ந்தார். வெற்றிகரமாக பட்டம் பெற்றவுடன், அவரது குடும்பத்தாருக்கு ஓர் ஆசை. நூற்பு ஆலைகளிலும், நூல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிய அக்குடும்பம், தங்களின் ஒரு வாரிசு, அயல்நாட்டிற்கு சென்று நூல்களுக்கு கலர் சேர்க்கும் கலை பற்றிய படிப்பை படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், டி.ஆர்.எஸ்.,சை லண்டனுக்கு அனுப்பினர். 
அப்போது லண்டனில் மான்செஸ்டர் நகரில் மட்டும் தான் இத்தொழில் சிறந்து விளங்கியது. டி.ஆர்.எஸ்., லண்டன் சென்றார். நன்றாகவே படித்து பட்டம் பெற்றார். அத்துடன் காதல் வயப்பட்டும் விட்டார். தங்களுடைய புதல்வனுக்கு நல்ல விதத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்த குடும்பத்தாரின் ஆசையை நிராசையாக்கி, தன்னுடைய லண்டன் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சட்டப்படி நடந்த திருமணம் அது.
தங்களது மகன் இவ்வாறு செய்து விட்டானே என்று யாரும் அவர் மீது கோபப்படவில்லை. சேலத்தில் அவர்களை மாலையிட்டு வரவேற்றது, சகோதரர் முருகேச முதலியார் தான். அன்பாக வரவேற்றனர். அவர் மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் தவறே இல்லை என்பது அவர்கள் முடிவு.
இந்தியாவுக்கு வந்தவுடன், தன் படிப்பிற்கு தகுந்தாற்போல், நூற்பு ஆலையை துவங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எழவில்லை. மாறாக, அவரது கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போது, அதாவது அவர் தன் மனைவியுடன் சேலத்திற்கு வந்து சேர்ந்த போது, 1933ல், சேலத்தில், ஏஞ்சல் பிலிம்ஸ் எனும் கம்பெனி, சினிமா படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. படங்கள் எடுக்க வேண்டும் என்றால், அப்போதெல்லாம் கல்கத்தாவிற்கு போக வேண்டும். தமிழகத்தில் எந்த வழியும் இல்லை. ஏஞ்சல் பிலிம்ஸ் பாகஸ்தர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன், டி.ஆர்.எஸ்.,சும் கூட்டுச் சேர்ந்து படம் எடுக்க துவங்கினார்.
கடந்த, 1933-1935 வரையிலான அந்த இரு ஆண்டுகளில், இரண்டு படங்கள் எடுத்தனர். படங்கள் சுமாராக போயிற்று என்றாலும், அதற்கு பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, அதை சொல்லியோ, எழுதியோ மாளாது. எதற்கெடுத்தாலும் கல்கத்தாவிற்கு போக வேண்டும் என்கிற நிலை, டி.ஆர்.எஸ்.,சுக்கு அலுப்பு தட்டியது. அந்த சவுகர்யங்களை சேலத்திலேயே செய்து கொண்டால் என்ன என்று, அவர் தீவிரமாக யோசித்தார். அதன் விளைவு தான், "மாடர்ன் தியேட்டர்ஸ்' என்கிற ஸ்டுடியோவின் உதயம்.
சேலம்-ஏற்காடு மலை அடிவாரத்தில் முதலில் பத்து ஏக்கர் நிலம் வாங்கினார். இது நடந்தது, 1935ல். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், படப்பெட்டியுடன் தான் வெளியே போக வேண்டும் என்கிற எண்ணத்தை அப்போதே மனதில் தேக்கி செயல்பட ஆரம்பித்தார்.படப்பிடிப்பு தளம், படப்பிடிப்புக்கான உபகரணங்கள் - பரிபூரணமான ஒரு லேபாரட்டரி, சங்கீத பதிவுக்கு ஒரு ரிக்கார்டிங் அறை.எடுத்தவரை படத்தை போட்டு பார்க்க ஒரு சிறு பிரிவியூ தியேட்டர்.இவ்வளவையும் அவர் அந்த ஸ்டுடியோவிற்குள் நிர்மாணித்தார்.1935ல், இது ஒரு அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கமும் அவரிடம் இல்லை.தன் மனதிற்கு சரி என்று பட்டதை அவர் செய்யாமல் விட்டதில்லை.ஸ்டுடியோ, தியேட்டர் வேலைகள் எல்லாம் முடிவடைந்த பின் தான், தயாரிப்பு வேலைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். 1936ல், ஸ்டுடியோ முழுமை பெற்று விட்டது என்றாலும், தயாரிப்பை துவக்கியது 1937ல் தான்.
கல்கத்தாவில் தயாரித்த கிருஷ்ண லீலா, பரசுராமர், நல்ல தங்காள் போன்ற படங்கள் தான், இவர் ஸ்டுடியோ ஆரம்பிப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன என்றால், அது நிதர்சனமான உண்மை. முதல் படம், "சதி அகல்யா!'
இப்போதெல்லாம் தமிழ்படங்களில் நடிக்க, நடிகையர்களை தேடி, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளர்கள் போகின்றனர். இதில், முதல் புரட்சியை, டி.ஆர்.எஸ்., தன் முதல் படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.
கதாநாயகியை தேடி, அவர் இலங்கைக்கு சென்றார். அவர் அங்கே சென்ற போது, அவரது கண்களில் பட்ட பெண் தான் சிங்களக் குயில் தவமணி தேவி!
தவமணி தேவிக்கு, டி.ஆர்.எஸ்., கொடுத்த வேடம் என்ன தெரியுமா?பதிவிரதா சிரோன்மணியான, "சதி அகல்யா' வேடம். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீச்சல் உடையில் அதிகமாக காணப்பட்ட தவமணி தேவியை, இப்படிப்பட்ட ஒரு தெய்விக பாத்திரத்திற்கு போட துணிச்சல் வேண்டும்.
அது நம்மவருக்கு நிறையவே இருந்தது. ரிஷி பத்தினியான, "அகல்யா' வேஷத்தை கொடுத்து, தவமணியை அதில் நடிக்க வைத்தார். நன்றாக வேலை வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் திரையிட்ட போது, மக்கள் ரிஷிபத்தினியை தான் பார்த்தனர். நீச்சல் உடை தவமணி தேவியை பார்க்கவில்லை. படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே அவர் தம் புரட்சிகரமான வேலையை ஆரம்பித்து விட்டார். அதை தொடர்ந்து வந்த படங்கள் தான், "பத்மஜோதி' எனும் தமிழ்படமும் "புரந்தரதாஸ்' எனும் கன்னடப் படமும்.
இவற்றுக்கு பின், 1938ல் எடுத்த படம் தான், "பாலன்' எனும் மலையாளப் படம். மலையாளத்தில் முதல் பேசும் படம். கேரள மாநிலமெங்கும் அது திரையிடப்பட்டது. முதல் மலையாளப்படமும் வெற்றிப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனால், தென்னகத்தில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் படங்களை தயாரிக்க ஆரம்பித்த முதல்வர்களில், இவர் மிகவும் முக்கியமானவர் எனலாம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பேசும் படங்கள் பல தொடர்ச்சியாக வெளிவந்த நேரம் அது. அப்போதைய தமிழ் பட உலகில், நூறாவது பேசும் படமாக, "பக்த நாமதேவர்' என்கிற படத்தையும் தயாரித்த பெருமை இவருக்குண்டு.
தமிழகத்தில், முதல் முதலாக சண்டை படத்தை அறிமுகப்படுத்திய பெருமை, டி.ஆர்.எஸ்.,சையே சாரும். அப்படி அவர் தயாரித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. பக்தி படங்களுக்கு மார்க்கெட் குறைந்த நேரம் அது. இது எடுத்த ஆண்டு, 1938.
அவர் எடுத்த ஸ்டன்ட் படத்தின் பெயர், "மாயா மாயவன்'. இதை நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார். இதன் கதாநாயகன், டி.கே.சம்பங்கி எனும் நாடக நடிகர். இந்தப் படமும் நன்றாகவே ஓடியது. இதை தொடர்ந்து, தண்டபாணி தேசிகர், தேவசேனா நடித்த, "தாயுமானவர்' எனும் படத்தை, டி.ஆர்.எஸ்., டைரக்ட் செய்து வெளியிட்டார். தேசிகரிடம் டைரக்டர் வைத்திருந்த அபிமானத்தின் காரணத்தினால், இப்படம் எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். 
அதன் பின், டி.ஆர்.எஸ்., தன் கவனத்தை ஆங்கிலக் கதைகளின் பக்கம் திருப்பினார். அதன் விளைவு தான், ""சந்தனத் தேவன்' படம். ஆங்கில கதையான, "ராபின்ஹுட்' படத்தை தழுவியது. அந்தப் படத்தின் கதாநாயகன், ஜி.எம்.பஷீர். இந்தப் படம் மிகவும் நன்றாக ஓடியது. தமிழ் மக்களுக்கு புதிய விருந்து. இதற்கு முன் ஸ்டுடியோஆரம்பித்த போது, அவர் செய்த புரட்சியை குறிப்பிட்டாக வேண்டும்.
ரா. வேங்கடசாமி
(நன்றி : தினமலர்-வாரமல்ர்  3 மார்ச் 2013)

No comments: