Monday, 11 March 2013

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் -2
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013,00:00 IST
சேலத்தில் ஸ்டுடியோவை ஆரம்பிக்கும் முன்னரே, படப்பிடிப்பு நிலையத்திற்கு முக்கியமான தேவை என்னவென்று அவர் தெரிந்து வைத்திருந்தார். 1935ம் வருடமே, படப்பிடிப்புக்காக அவர் ஜெர்மன் நாட்டிலிருந்து, இரண்டு சிறந்த, "கேமராமேன்'களை வரவழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். இதற்கு சர்க்கார் அனுமதியையும் பெற்றுக் கொண்டார். ஒருவரின் பெயர், "போடோ கூச் வாக்கர்' இன்னொருவரின் பெயர், "பேய்ஸ்' இருவரும் தந்திரக் காட்சிகளை எடுப்பதில் நிபுணர்கள். சதி அகல்யாவிலிருந்து தொடர்ந்து வந்த புராணப் படங்களில் காணப்பட்ட தந்திரக் காட்சிகளை எடுத்தவர்கள் இவர்கள்தான்.
மாடர்ன் தியேட்டர்சாரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால், படம் ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் மக்கள் வருவர். அதற்குக் காரணம், படத்தின், "டைட்டில்கள்!' ஒவ்வொரு படத்தின் டைட்டிலும், அவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கும். படத்திற்கு படம் வித்தியாசமான டைட்டில் கார்டின் வேலையும் ஆரம்பமாகி விடும். ஒரு படத்தின், "டைட்டில்' எடுக்க, பத்தாயிரம் செலவு என்றால், அதை விடப் பலமடங்கு செலவு செய்து, "டைட்டிலை' தன் திருப்திக்கு எடுக்க வைப்பார். அவரது மனதில் திருப்தி ஏற்படும் வரை, கேமராமேன்களும் சலிக்காமல் உழைப்பர்.
டைட்டில்களை காண்பிப்பதில் புதுமையைச் செய்தவர், டி.ஆர்.எஸ்., தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த விஷயத்திற்கு அஸ்திவாரமிட்டவர் கள் அந்த இரு ஜெர்மன் கேமராமேன்கள் தான். அவர்களுக்கு உதவியாளர்களாக நம் தமிழகத் தொழில் நிபுணர்களையே டி.ஆர்.எஸ்., நியமித்தார். அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்
டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகிய இருவர் மட்டுமே. இவர்கள் தந்திரக் காட்சிகளில் நிபுணர்களாக திகழ்ந்தனர்.
மாடர்ன் தியேட்டர்சில் தொழில் கற்று, பின்னால் பெரும் டைரக்டர் ஆன கேமராமேன்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஜி.ஆர்.நாதன், மஸ்தான், ஆர்.எம்.கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.லால் ஆகியோர்.
இந்த இரண்டு ஜெர்மன் கேமராமேன்களும், படப்பிடிப்பு சம்பந்தமாக, சேலம் நகரத்தை விட்டு, 6 கி.மீ.,க்கு அப்பால் செல்ல வேண்டும் என்றால், கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். அதையும் டி.ஆர்.எஸ்., சுணங்காமல் செய்தார்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும், டி.ஆர்.எஸ்.,சின் கடினமான உழைப்பு இருந்தது. அதற்குக் காரணம், அவர் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கட்டுப்பாட்டு முறை.
தினமும் காலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆபீசில், அவரது கார் நுழையும்போது, மணி சரியாக 9:30 என்பது உறுதி. "ராமலிங்க விலாஸ்' என்று, அவரது தந்தையின் பெயரில் இருந்த அந்தப்பெரிய பங்களாவில் தான், காரியாலயம் இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்தின் நடுவே அமைந்திருந்த அக்கட்டடம்தான், ஸ்டுடியோவின் ஜீவநாடி. படத்தயாரிப்பு ஸ்டுடியோவில் என்றாலும், நிதி நிர்வாகம், பட வெளியீடு சம்பந்தமான வேலைகள் இங்கே தான் கவனிக்கப்பட்டது.
தினந்தோறும் வரும் கடிதங்களை, அவர் படித்துவிட்டு பதிலை டைப்பிஸ்டுகளை அழைத்து, "டிக்டேட்' செய்வார். அப்போது இங்கு டைப்பிஸ்ட்டாக வேலை செய்தவர் டைரக்டர் முக்தா சீனிவாசனின் மூத்த சகோதரர் முக்தா ராமசாமி. இவர்கள் இருவருந்தான் பின்னாளில் முக்தா பிலிம்ஸ் என்கிற படக் கம்பெனியை துவங்கி, பல தமிழ்ப்படங்களை எடுத்தவர்கள்.
அடுத்தபடியாக, டி.ஆர்.எஸ்., வருவது, "ரிகர்சல் ஹால்' எனும் புரொடக்ஷன் காரியாலயத்திற்கு. அருகே ஒரு பெரிய பங்களா. அதற்கு எதிரே பெரியதொரு பந்தல், அந்தப் பந்தலில் தான், மியூசிக் ரிகர்சல் நடக்கும். அங்கு ஒத்திகை முடிந்ததும், மறு நாள் படப்பிடிப்புக்கான நடிகர், நடிகையர் ஒத்திகை. மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாற்றில், முதலில் காட்சி அமைப்புகளை நன்றாக ஒத்திகை பார்க்காமல், படப்பிடிப்புக்கு போனதாக ஆரம்பகால சரித்திரமே இல்லை எனலாம். சில நாட்களில், அந்த ஒத்திகையை டி.ஆர்.எஸ்., பார்ப்பதுண்டு. இதெல்லாம் தினந்தோறும் வாடிக்கையாக நடக்கும் வேலை என்று தான் சொல்ல வேண்டும்.
மாடர்ன் தியேட்டர்சுக்கு என்று, நிரந்தரக் கதாசிரியர்கள் உண்டு. சில நாட்களில், அவர்களிடமும், "டிஸ்கஷன்' நடக்கும். கவிஞர்கள் அமைத்த பாட்டுக்கு டியூன் போடும் முன், அந்த பாட்டுகள் கருத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றனவா என்று, முதலில் டி.ஆர்.எஸ்., பரிசீலிப்பார். அதற்கு பிறகுதான், அது மியூசிக் டைரக்டரிடம் போகும்.அப்போதெல்லாம் எழுதிக் கொடுத்த பாட்டுகளுக்குத் தான் மெட்டு அமைத்தனர்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கதாசிரியர்கள் இலாகா, வசனகர்த்தாக்கள் இலாகா, கவிஞர்கள் இலாகா என்று, ஒவ்வொரு துறைக்கும் அங்கே ஆட்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் திறமையைக் காட்ட, தேவைப்பட்ட கதைகளுக்கு வித்தியாசமாக ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் எனில், தங்களது கருத்தை எழுதித் தருவர். அவ்வளவு பேருடைய எழுத்துகளும் டி.ஆர்.எஸ்.,சிடம் போகும். அதில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் டி.ஆர்.எஸ்., எடுத்து, உபயோகித்துக் கொள்வார். எல்லாருடைய கருத்துகளையும் ஒன்றாகத் திரட்டிப் படமாக்கியதால், பட டைட்டிலில் கதை, "மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா' என்றுதான் வரும்.
கதை முடிவான பிறகுதான், நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறும். இதைக்கூட எந்தெந்த பாத்திரத்திற்கு யாரைப் போடலாம் என்று, அவர்கள் எண்ணத்தைக் கேட்கும் வழக்கம் அவரிடம் இருந்தது. அதனால், நடிகர், நடிகையர் தேர்வு கலந்து ஆலோசிக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்தது. பெரும்பாலும் திரை உலகில், அப்போது பிரசித்தி பெற்ற நடிகர், நடிகையர் தான், இங்கே முதலிடத்தைப் பிடிப்பர் என்றால் அதில் வியப்பு இல்லை.
இதற்குப் பின், படத்திற்கு டி.ஆர்.எஸ்., யாரை டைரக்டராக நியமிக்கிறாரோ, அவர்தான் படத்தை டைரக்ட் செய்ய வேண்டும். ஆக, படம் எடுப்பது ஒரு கூட்டு முயற்சி என்கிற கொள்கைகளை முதன்முதலில் உருவாக்கியவர் டி.ஆர்.எஸ்., தான்.
இது முடிந்தவுடன், "பட்ஜெட்' விஷயம். அதற்கென காரியாலயத்தில் அமர்ந்து, அங்கிருந்த முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி, இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று வரையறுத்து விடுவார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் கம்பெனியில், ஆரம்ப காலத்தில் சில நடிகர்கள் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தனர். இப்போது அந்த பெயர்களை கேட்டால், உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். நாடக நடிப்புத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த காளி.என்.ரத்தினம், டி.ஆர்.எஸ்.,க்கு மிகவும் பிடித்த காமெடியன். என்.எஸ்.கே., இங்கே வரும் முன் காளி. என்.ரத்தினம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்தார்.
அவருடன் இருந்த மிகவும் முக்கியமானவர்தான் டி.எஸ்.துரைராஜ் மற்றும் வி.எம்.ஏழுமலை. பின்னால் வந்து சேர்ந்தவர், ஏ.கருணாநிதி. இவர்கள் எல்லாரும், அப்போது மாத சம்பளத்தில் இருந்தனர். நடிப்பு மட்டும் அவர்களது தொழிலாக இருக்கவில்லை. கதைகளுக்கான சில முக்கிய யோசனைகளையும், டி.ஆர்.எஸ்.,சிடம் சொல்வர். இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக முறை, அப்போது இங்கே இருந்தது.
"முதலாளி நம்மிடம் யோசனை கேட்கிறார்' என்பதில், இவர்களுக்கும் பரமதிருப்தி.அதனால், கதை நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்களும் நல்ல யோசனைகள் நல்கி வந்தனர். இதைப் போல், கூட்டு முயற்சியுடன் அவர் டைரக்ட் செய்து வெளியிட்ட படங்கள் எல்லாமே நன்றாக ஓடின. அவற்றின் வெற்றிக்குக் காரணம், டி.ஆர்.எஸ்., என்கிற தனிமனிதரின் அயராத உழைப்பு மட்டுமல்ல. சரியாகத் திட்டமிட்டு எதையும் செய்யும் வாடிக்கை தான்.
அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுக்கும் படங்களை, இப்போது மாவட்ட வாரியாக விற்றுவிடும் பழக்கம் போல், யாருக்கும் விற்கவில்லை. மாடர்ன் தியேட்டர்சில், "டிஸ்டிரிபியூஷன்' பகுதி என்று தனியாக இயங்கி வந்தது. அந்த வினியோகத்தைக் கவனித்துக் கொள்ள, ஒரு மானேஜர் இருந்தார். ஐம்பது பேருக்கு மேல் அங்கே, "ரெப்ரசென்டேடிவ்'களாக வேலை செய்து வந்தனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்தவுடன், இவர்கள் அவ்வளவு பேரும் பெட்டியுடன் அந்தந்த ஊருக்குப் போய் விடுவர். தினமோ, வாரமோ, இல்லை, மாதமோ பண வசூல் ஒழுங்காக ஆபீசுக்கு வந்து சேரும். இப்படி வேலை செய்யும் பிரதிநிதிகளுக்கு, டி.ஆர்.எஸ்.,சைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால், தவறு நடப்பதற்கு அதிக சான்ஸ் இல்லை. சிறு தவறு நடந்தாலும், அந்த நபரின் வேலைக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், மாடர்ன் தியேட்டர்ஸ் வளர்ந்தது.
ரிகர்சல் ஹால் வேலையோடு நிறுத்திக் கொள்வதில்லை அவர். மாலை சரியாக, 3:00 மணிக்கு அவர் ஸ்டுடியோவிற்கு வருவார். அவர் வருகிறார் என்றால், அந்தப் பக்கமாக ஈ, காக்காய் கூடப் பறக்காது. அதாவது, அவ்வளவு அமைதி கடைபிடிக்கப்படும் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறேன். இந்த சமயத்தில், ஸ்டுடியோவில் உள்ள அவ்வளவு தொழிலாளர்களும், தங்களுடைய வேலையில் மிகவும் கவனமாக இருப்பர்.
காரை விட்டு இறங்கியதும், முதலில் எதிரே இருக்கும் கார்ப்பென்டர் செக்ஷனுக்குள் நுழைவார். அதைத் தொடர்ந்து, "மோல்டிங் பிரிவு' அடுத்தது ஆர்ட் செக்ஷன், பிறகு, காஸ்ட்யூம்ஸ் டிபார்ட்மென்ட். அங்கே நடப்பதைக் கவனித்த பின், மேக்கப் செக்ஷன். வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும் சம்பந்தப்பட்ட மேக்கப்மேன் அங்கே இருந்தாக வேண்டும். அடுத்தது லேபரட்டரி, தொடர்ந்து கேமரா, சவுண்ட், ஸ்டில்ஸ், எடிட்டிங், எலக்ட்ரிகல் என்று, எல்லா பகுதிக்கும் சென்று உலா வருவார்.
அவர் கண்களுக்கு மட்டும் எதுவுமே தப்பாது. இந்தத் தொழில் கட்டடங்களை அவர் நேரில் பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. அந்தப் பகுதியில் வேலை செய்பவர்கள், குற்றங்குறைகளை நேரில் அவரிடம் சொல்லலாம். எழுதியும் தரலாம். எந்தப் பகுதியிலும், எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனத்தைச் செலுத்தினார்.
இவ்வளவு பகுதிகளையும் பார்வையிட்ட பின், ஸ்டுடியோ காரியதரிசியின் அறைக்கு வந்து அமர்வார். செகரட்டரி, மானேஜர் ஆகிய இருவரிடமும், அடுத்து படப்பிடிப்புக்கு வேண்டிய செட்டுகள், காஸ்ட்யூம்ஸ் ஆகியவற்றைப் பற்றி பேசி, சம்பந்தப்பட்டவர்களை அங்கே வரவழைப்பார். கதைக்கேற்றபடி, ஆர்ட் டைரக்டர் நான்கு விதமான செட் டிசைன்கள் போட வேண்டும். அதேபோல், காஸ்ட்யூமர் நான்கு விதமான டிசைன்கள் உடைகளுக்காகப் போட வேண்டும். இவற்றில் எது அங்கீகரிக்கப்படுகிறதோ, அவற்றை, பத்து தினங்களில் தயார் செய்து விட வேண்டும்.
படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன், இவையெல்லாம் தயாராக இருக்க வேண்டும். காஸ்ட்யூமர் டிரஸ்களை தயார் செய்தபின், அந்த ஆடைகளை படத்திற்கு, "புக்' செய்யப்படும், நடிகர், நடிகை, வில்லன் ஆகியவர்களை வரவழைத்து, மேக்கப்புடன், அந்த டிரஸ்களைப் போட்டுப் பார்த்து, அதை ஸ்டில் எடுத்து, டி.ஆர்.எஸ்.,சிடம் காண்பிக்க வேண்டும். அதில், மாறுதல் ஏதாவது இருந்தால், படப்பிடிப்புக்கு முன் அவை சரி செய்யப்பட்டு விடும். அதற்கு பின்புதான் படப்பிடிப்பு.
ஆடை அலங்காரத்தைப் பார்ப்பதோடு அவர் நிறுத்திக் கொள்ள மாட்டார். மேக்கப் டெஸ்ட் செய்து, கதாபாத்திரத்திற்குத் தகுந்தாற் போல், தலையில், "விக்', முகத்தில் மீசை இவையெல்லாம், ஓ.கே., செய்து விடுவார். அவரோ, இல்லை படத்தை டைரக்ட் செய்யப்போகும் நபரையோ, அருகில் வைத்து தான் இவ்வளவு வேலைகளையும், டி.ஆர்.எஸ்., கவனிப்பார். நடிகர், நடிகையர், இந்த மேக்கப் டெஸ்டுகளுக்கு ஒத்துழைப்பு தருவர். திரையில் தெரியப் போவது அவர்களது முகம்தானே!
இவ்வளவு வேலைகளையும் தன் ஒருநாள், "ஷெட்யூலில்' உள்ளடக்கிக் கொண்டு, தமிழகத்தில் வேலை செய்த முதல் ஸ்டுடியோ முதலாளியும், டைரக்டரும் டி.ஆர்.எஸ்., தான். இதற்கு அப்பால், டி.ஆர்.எஸ்., ஒரு முக்கியமான வேலையை, வெளியுலகத்திற்கே தெரியாமல் செய்து வந்தார். அது என்ன?
 தொடரும்.

ரா.வேங்கடசாமி
நன்றி : தினமலர் - வாரமலர் (10/03/2013)

Monday, 4 March 2013

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்- 1

திருச்செங்கோடு, ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். அதன் தல புராணம் மிகவும் பிரசித்தம். திருச்செங்கோட்டின் மலை மீது இருந்து ஆட்சி புரிபவர்கள் இருவர். அப்பனும், மகனும் தான். அப்பன் அர்த்தநாரீஸ்வரர், மகன் வேலவன். அப்பனும், அம்மையும் ஒரே உருவில் காட்சியளிக்கும் இடம் அது. ஆனால், கீழே கைலாசநாதரின் கொடி பறக்கிறது. மலை ஏறும் முன், நீங்கள் கீழே உள்ள ஆறுமுக சாமியை தரிசித்து விட்டு தான் போக வேண்டும்.
அன்று இந்த ஊர் மிகவும் சிறியது. ஆனால், இன்று நாகரிகம் வளர்ந்து விட்ட நிலையில், ஊரும் தன்னை விருத்தி செய்து கொண்டது.சென்ற நூற்றாண்டில், இந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ராஜாஜி, சுப்பராயன் மற்றும் ராமலிங்க முதலியார் ஆகியோர் தான். காந்தி ஆசிரமத்தை நிறுவியதால், ராஜாஜியும், அரசியலால் சுப்பராயனும் பெயர் பெற்றனர். தன் வியாபார திறமையால், ராமலிங்க முதலியார் பேசப்பட்டார்.
அந்த ஊரில் இருந்து கொண்டே திருப்பூர், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் என்று, பல ஊர்களில் கடைகளை வைத்து, மில்களில் இருந்து நேரடியாக நூல் வாங்கி, மொத்த வியாபாரம் செய்தார்."வி.வி.சி.ராமலிங்க முதலியார் சன்ஸ்' என்பது அவரது நிறுவனத்தின் பெயர்.
ஒழுங்கு, நேர்மை, தெய்வபக்தி, நாணயம் இவை அவரது வியாபாரத்தின் மூல மந்திரம். வி.வி.சி.ஆர்., என்றாலே, எழுந்து நின்று மரியாதை கொடுத்த பெயர் அது.
அந்த வள்ளல் பெற்றெடுத்த மக்கள் ஐவர். முதல் மகன் சிறுவயதிலேயே அதாவது, தம் 48 வயதிலேயே இறந்து விட்டார்.அவரது பெயர் கந்தப்ப முதலியார். உயிரோடு இருந்தவரை, அவர் தம் தந்தையுடன் நூல் வியாபாரத்தில் தான் ஈடுபட்டிருந்தார்.வீட்டில் இவருக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு அதிகம்.இன்னொருவர், சின்னப்ப முதலியார். அவரும் இளம் வயதி@ல@ய இயற்கை எய்தி விட்டார். அவருக்கு இளையவர், வையாபுரி முதலியார். திருச்செங்கோட்டில், "புள்ளிகார் மில்ஸ்' என்ற புகழ்பெற்ற நூற்பு ஆலையை நிறுவி, ஏராளமான குடும்பங்களுக்கு உதவியவர்.
அவருக்கு இளையவர் தான், சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.
அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் அவர் நிர்வாக அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். திருத்தணியில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை.
அப்படிப்பட்ட உத்தமரின் தம்பி தான் டி.ஆர்.சுந்தரம். வி.வி.சி.ஆர். ராமலிங்க முதலியாரின் ஐந்தாவது மகன். ஜூலை, 16, 1907ல், திருச்செங்கோட்டில் பிறந்தார்.
டி.ஆர்.எஸ்., தன் இளமைக் காலத்தை திருச்செங்கோட்டில் கழித்தாலும், பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். படிப்பில் எப்போதுமே அவர் சோடை போனதில்லை. புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் ஆராய்ந்து அறியும் எண்ணம் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். சென்னையில், அவர் பிரசிடென்சி கல்லூரியில், பி.ஏ., படிப்புக்காக சேர்ந்தார். வெற்றிகரமாக பட்டம் பெற்றவுடன், அவரது குடும்பத்தாருக்கு ஓர் ஆசை. நூற்பு ஆலைகளிலும், நூல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிய அக்குடும்பம், தங்களின் ஒரு வாரிசு, அயல்நாட்டிற்கு சென்று நூல்களுக்கு கலர் சேர்க்கும் கலை பற்றிய படிப்பை படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், டி.ஆர்.எஸ்.,சை லண்டனுக்கு அனுப்பினர். 
அப்போது லண்டனில் மான்செஸ்டர் நகரில் மட்டும் தான் இத்தொழில் சிறந்து விளங்கியது. டி.ஆர்.எஸ்., லண்டன் சென்றார். நன்றாகவே படித்து பட்டம் பெற்றார். அத்துடன் காதல் வயப்பட்டும் விட்டார். தங்களுடைய புதல்வனுக்கு நல்ல விதத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்த குடும்பத்தாரின் ஆசையை நிராசையாக்கி, தன்னுடைய லண்டன் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சட்டப்படி நடந்த திருமணம் அது.
தங்களது மகன் இவ்வாறு செய்து விட்டானே என்று யாரும் அவர் மீது கோபப்படவில்லை. சேலத்தில் அவர்களை மாலையிட்டு வரவேற்றது, சகோதரர் முருகேச முதலியார் தான். அன்பாக வரவேற்றனர். அவர் மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் தவறே இல்லை என்பது அவர்கள் முடிவு.
இந்தியாவுக்கு வந்தவுடன், தன் படிப்பிற்கு தகுந்தாற்போல், நூற்பு ஆலையை துவங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எழவில்லை. மாறாக, அவரது கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போது, அதாவது அவர் தன் மனைவியுடன் சேலத்திற்கு வந்து சேர்ந்த போது, 1933ல், சேலத்தில், ஏஞ்சல் பிலிம்ஸ் எனும் கம்பெனி, சினிமா படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. படங்கள் எடுக்க வேண்டும் என்றால், அப்போதெல்லாம் கல்கத்தாவிற்கு போக வேண்டும். தமிழகத்தில் எந்த வழியும் இல்லை. ஏஞ்சல் பிலிம்ஸ் பாகஸ்தர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன், டி.ஆர்.எஸ்.,சும் கூட்டுச் சேர்ந்து படம் எடுக்க துவங்கினார்.
கடந்த, 1933-1935 வரையிலான அந்த இரு ஆண்டுகளில், இரண்டு படங்கள் எடுத்தனர். படங்கள் சுமாராக போயிற்று என்றாலும், அதற்கு பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, அதை சொல்லியோ, எழுதியோ மாளாது. எதற்கெடுத்தாலும் கல்கத்தாவிற்கு போக வேண்டும் என்கிற நிலை, டி.ஆர்.எஸ்.,சுக்கு அலுப்பு தட்டியது. அந்த சவுகர்யங்களை சேலத்திலேயே செய்து கொண்டால் என்ன என்று, அவர் தீவிரமாக யோசித்தார். அதன் விளைவு தான், "மாடர்ன் தியேட்டர்ஸ்' என்கிற ஸ்டுடியோவின் உதயம்.
சேலம்-ஏற்காடு மலை அடிவாரத்தில் முதலில் பத்து ஏக்கர் நிலம் வாங்கினார். இது நடந்தது, 1935ல். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், படப்பெட்டியுடன் தான் வெளியே போக வேண்டும் என்கிற எண்ணத்தை அப்போதே மனதில் தேக்கி செயல்பட ஆரம்பித்தார்.படப்பிடிப்பு தளம், படப்பிடிப்புக்கான உபகரணங்கள் - பரிபூரணமான ஒரு லேபாரட்டரி, சங்கீத பதிவுக்கு ஒரு ரிக்கார்டிங் அறை.எடுத்தவரை படத்தை போட்டு பார்க்க ஒரு சிறு பிரிவியூ தியேட்டர்.இவ்வளவையும் அவர் அந்த ஸ்டுடியோவிற்குள் நிர்மாணித்தார்.1935ல், இது ஒரு அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கமும் அவரிடம் இல்லை.தன் மனதிற்கு சரி என்று பட்டதை அவர் செய்யாமல் விட்டதில்லை.ஸ்டுடியோ, தியேட்டர் வேலைகள் எல்லாம் முடிவடைந்த பின் தான், தயாரிப்பு வேலைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். 1936ல், ஸ்டுடியோ முழுமை பெற்று விட்டது என்றாலும், தயாரிப்பை துவக்கியது 1937ல் தான்.
கல்கத்தாவில் தயாரித்த கிருஷ்ண லீலா, பரசுராமர், நல்ல தங்காள் போன்ற படங்கள் தான், இவர் ஸ்டுடியோ ஆரம்பிப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன என்றால், அது நிதர்சனமான உண்மை. முதல் படம், "சதி அகல்யா!'
இப்போதெல்லாம் தமிழ்படங்களில் நடிக்க, நடிகையர்களை தேடி, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளர்கள் போகின்றனர். இதில், முதல் புரட்சியை, டி.ஆர்.எஸ்., தன் முதல் படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.
கதாநாயகியை தேடி, அவர் இலங்கைக்கு சென்றார். அவர் அங்கே சென்ற போது, அவரது கண்களில் பட்ட பெண் தான் சிங்களக் குயில் தவமணி தேவி!
தவமணி தேவிக்கு, டி.ஆர்.எஸ்., கொடுத்த வேடம் என்ன தெரியுமா?பதிவிரதா சிரோன்மணியான, "சதி அகல்யா' வேடம். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீச்சல் உடையில் அதிகமாக காணப்பட்ட தவமணி தேவியை, இப்படிப்பட்ட ஒரு தெய்விக பாத்திரத்திற்கு போட துணிச்சல் வேண்டும்.
அது நம்மவருக்கு நிறையவே இருந்தது. ரிஷி பத்தினியான, "அகல்யா' வேஷத்தை கொடுத்து, தவமணியை அதில் நடிக்க வைத்தார். நன்றாக வேலை வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் திரையிட்ட போது, மக்கள் ரிஷிபத்தினியை தான் பார்த்தனர். நீச்சல் உடை தவமணி தேவியை பார்க்கவில்லை. படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே அவர் தம் புரட்சிகரமான வேலையை ஆரம்பித்து விட்டார். அதை தொடர்ந்து வந்த படங்கள் தான், "பத்மஜோதி' எனும் தமிழ்படமும் "புரந்தரதாஸ்' எனும் கன்னடப் படமும்.
இவற்றுக்கு பின், 1938ல் எடுத்த படம் தான், "பாலன்' எனும் மலையாளப் படம். மலையாளத்தில் முதல் பேசும் படம். கேரள மாநிலமெங்கும் அது திரையிடப்பட்டது. முதல் மலையாளப்படமும் வெற்றிப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனால், தென்னகத்தில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் படங்களை தயாரிக்க ஆரம்பித்த முதல்வர்களில், இவர் மிகவும் முக்கியமானவர் எனலாம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பேசும் படங்கள் பல தொடர்ச்சியாக வெளிவந்த நேரம் அது. அப்போதைய தமிழ் பட உலகில், நூறாவது பேசும் படமாக, "பக்த நாமதேவர்' என்கிற படத்தையும் தயாரித்த பெருமை இவருக்குண்டு.
தமிழகத்தில், முதல் முதலாக சண்டை படத்தை அறிமுகப்படுத்திய பெருமை, டி.ஆர்.எஸ்.,சையே சாரும். அப்படி அவர் தயாரித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. பக்தி படங்களுக்கு மார்க்கெட் குறைந்த நேரம் அது. இது எடுத்த ஆண்டு, 1938.
அவர் எடுத்த ஸ்டன்ட் படத்தின் பெயர், "மாயா மாயவன்'. இதை நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார். இதன் கதாநாயகன், டி.கே.சம்பங்கி எனும் நாடக நடிகர். இந்தப் படமும் நன்றாகவே ஓடியது. இதை தொடர்ந்து, தண்டபாணி தேசிகர், தேவசேனா நடித்த, "தாயுமானவர்' எனும் படத்தை, டி.ஆர்.எஸ்., டைரக்ட் செய்து வெளியிட்டார். தேசிகரிடம் டைரக்டர் வைத்திருந்த அபிமானத்தின் காரணத்தினால், இப்படம் எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். 
அதன் பின், டி.ஆர்.எஸ்., தன் கவனத்தை ஆங்கிலக் கதைகளின் பக்கம் திருப்பினார். அதன் விளைவு தான், ""சந்தனத் தேவன்' படம். ஆங்கில கதையான, "ராபின்ஹுட்' படத்தை தழுவியது. அந்தப் படத்தின் கதாநாயகன், ஜி.எம்.பஷீர். இந்தப் படம் மிகவும் நன்றாக ஓடியது. தமிழ் மக்களுக்கு புதிய விருந்து. இதற்கு முன் ஸ்டுடியோஆரம்பித்த போது, அவர் செய்த புரட்சியை குறிப்பிட்டாக வேண்டும்.
ரா. வேங்கடசாமி
(நன்றி : தினமலர்-வாரமல்ர்  3 மார்ச் 2013)