Saturday 22 September 2012

காந்தியின் திமிர்

காந்தியின் திமிர்:
நண்பர்களே,
என்னுடைய நண்பர் வெங்கடரமணன் கனடாவில் ஒரு லேஸர் விஞ்ஞானியாக இருக்கிறார். தமிழில் சில அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அவர் கணிப்பொறிசார்ந்த ஒரு சொல்லாட்சியை உருவாக்கினார் – கொந்தர். ‘Hacker’ என்ற சொல்லின் தமிழாக்கம் அது. கணிப்பொறி நிரல்களைக் கள்ளத்தனமாக ஊடுருவி உடைப்பவர்கள் இவர்கள். நிரல்களை அழிக்கும் நச்சுநிரலிகளை [வைரஸ்] உருவாக்கிப் பரப்புபவர்கள். உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் இவர்கள் பலலட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள கணிப்பொறி நிரல்களைப் பயனற்றுப் போகச்செய்கிறார்கள்.
சாதாரணமாக இவர்களை நாம் ஓர் அழிவுச்சக்தியாகத்தான் பார்ப்போம். கணிப்பொறி நிரல் எழுதுவதை ஒரு தொழிலாகக் கண்டால் இவர்கள் அழிவுச்சக்திகள்தான், சந்தேகமே இல்லை. ஆனால், அதை ஓர் அறிவுச்செயல்பாடாகக் கண்டால் கொந்தர்கள் மிகமிக ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்கள் என்றார் வெங்கடரமணன்.
ஏனென்றால் அறிவுச்செயல்பாடென்பது ஒரு முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். ஒரு நேர்நிலை இயக்கத்துக்கு அதேயளவு வீச்சுள்ள எதிர்நிலை இயக்கம் தேவை. அந்த எதிர்ச்சக்திதான் இதை செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது. இது தன் குறைகளைக் களைந்து தன்னை முன்னகர்த்திக்கொள்ளச் செய்கிறது. தன்னைத் தானே தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான சவால்களை உருவாக்குகிறது.
உங்கள் வகுப்பில் உங்களுக்கு சரியான போட்டியாளர் என ஒருவர் இருந்தால் உங்கள் திறமை எத்தனைமடங்கு தீவிரமடைகிறது! மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போட்டியே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து முதலிடத்துக்கு வந்தபிறகு, தாங்களே பணம் செலவிட்டு ஒரு போட்டியாளரை உருவாக்கிக் கொண்டு, அந்தப் போட்டியாளரை எதிர்த்துச் செயல்படுவது ஒரு நிர்வாகவியல் தந்திரம். 1992-இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரட் [Ross Perot] என்பவரைப்பற்றி வாசித்தபோதுதான் இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். அன்று எனக்குப் பலதளங்களில் ஒரு பெரிய திறப்பாக இருந்தது அந்தச்சேதி.
கொந்தர்கள் என்றால் கொத்திவிடுபவர்கள். பெரிய அணை ஒன்றில் உடைப்பை உருவாக்குபவர்கள். பெரிய சாலை ஒன்றில் பள்ளத்தைத் தோண்டி வைப்பவர்கள். அவர்கள் இதன்மூலம் ஒரு பெரிய அமைப்பை நிலைகுலையச் செய்கிறார்கள். அந்த அமைப்பின் குறைகளை அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள ஓட்டைகளையும் விரிசல்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்று கொத்திவிடுகிறார்கள்.
விளைவாக அந்த அமைப்பு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது. தன் ஒட்டுமொத்த அமைப்பையே அது மறுபரிசீலனை செய்கிறது. தன் வழிமுறைகளை ஆராய்கிறது. தன்னுடைய சிந்தனைப்போக்கை வேறு பல தடங்களில் செலுத்தி புதியபுதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது. தன்னைப் புத்தம் புதியதாக மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கிறது.
கொந்தர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் வங்கித்தொழிலுக்கு இணையத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாது. இருபதாண்டுகளாக கொந்தர்கள் இணையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து உடைத்து சவாலை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எதிரான செயலாகவே இணையத்தின் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகி வந்தன. இப்போதும் கொந்தர்கள் அவ்வப்போது கைவைக்கிறார்கள். உடனே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் மேம்படுகின்றன.
இன்றுள்ள எல்லா நிரலித்தொழில் வளர்ச்சியிலும் கொந்தர்களின் பங்களிப்புண்டு என்கிறார் வெங்கடரமணன். இன்று பெரிய நிறுவனங்கள் கொந்தர்களை அவர்களே சம்பளம்கொடுத்து உருவாக்குகிறார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள, வளர்ந்து முன்செல்ல.
அசல்சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒருவகை கொந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் இதைச் சொல்லவந்தேன். மானுடசிந்தனை என்ற மிகப்பெரிய அமைப்பு பல்லாயிரம் வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பெரிய நதி போலத் தன் பாதையை உருவாக்கிக்கொண்டு சுழித்துப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அசல்சிந்தனையாளர்கள் என்னும் கொந்தர்கள் அந்த மானுடசிந்தனை என்ற நதியின் கரையை அவ்வப்போது கொந்தி விடுகிறார்கள். விளைவாக நதி நிலைகுலைகிறது. அந்த உடைப்புவழியாகப் பீறிட்டுப் புதிய திசையில் ஓட ஆரம்பிக்கிறது.
அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மைக் குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.
இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.
அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.
உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
ஆனால் அசல்சிந்தனையாளன் புத்தம்புதியதாக ஒன்றைச் சொல்கிறான். அதுவரை மனிதசிந்தனையில் இல்லாத ஒன்றாக அது இருக்கலாம். அல்லது அதுவரை இருந்த ஒரு விதை முளைத்து வந்ததாக இருக்கலாம். அல்லது இருந்த ஒன்றின் புத்தம்புதிய வடிவமாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு புதிய கொந்தலைச் செய்கிறான். நம் சிந்தனையில் அல்ல, மனித சிந்தனையில்.
அப்படிப்பட்ட அசல் சிந்தனையாளர்களில் ஒருவர் காந்தி. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான முதற்சிந்தனையாளராகவே எப்போதும் அவர் கருதப்படுகிறார். உலகம் முழுக்க. அவர் வாழ்ந்த போதும் சரி, மறைந்தபின் இந்த முக்கால் நூற்றாண்டுக்காலத்திலும் சரி, ஒவ்வொருநாளும் பல கோணங்களில் விவாதிக்கப்படும் மாபெரும் முதற்சிந்தனையாளர் காந்தி. காந்தியின் சிந்தனைகளின் ஒவ்வொரு துளியும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உலக சிந்தனையாளர்களால் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
காந்தியைப்பற்றி எவ்வளவோ வாசித்து, பேசியிருக்கிறேன். இன்றைய காந்தி என்றபேரில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. இன்னும் ஒரு நூல் அளவுக்குத் தொகுக்கப்படாத கட்டுரைகள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக தினமும் காந்தியை எங்கோ ஒரு இடத்தில் புத்தம்புதிதாகக் கண்டுகொண்டிருக்கிறேன். சில சமயம் விசித்திரமாக, சிலசமயம் விபரீதமான கோணத்தில் எல்லாம் காந்தி நம் சிந்தனைக்குத் தோற்றமளிப்பார்.
இது அசல் சிந்தனையின் ஒரு இயல்பு. அது நம்முடைய மூளை என்னும் வைக்கோல்போருக்குள் ஒரு சிறு தீப்பொறியைப் போட்டுவிடுகிறது. நம் மூளை என்னும் பாலையில் விதைகளை வீசி விடுகிறது. எங்கோ எப்போதோ சிறு காற்று கிடைத்தால் கொஞ்சம் நீர் கிடைத்தால் அது முளைக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் அசல்சிந்தனையாளர்கள் என நான் நினைக்கும் பலர் எனக்கு இப்படித்தான் அனுபவமாகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பவே முடிவதில்லை.
எனக்கு தல்ஸ்தோய் அப்படிப்பட்டவர். நான் இருபதாண்டுகளாக அவரிடமிருந்து தப்ப முயன்றுகொண்டிருப்பவன். ஹென்றி தோரோ அப்படிப்பட்டவர். அதற்கு முன் நீட்சேயும் ஹெகலும் அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு தங்கள் சிந்தனைகளைத் தரவில்லை. நானே சிந்திப்பதற்கான கட்டாயங்களைத் தந்தார்கள். சிந்திக்காமல், என்னை நானே மீட்டுக் கட்டிக்கொள்ளாமல், முன்னகர முடியாது என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்தக் கட்டாயம் பலசமயம் எரிச்சலூட்டுவது. பலசமயம் பொறுமை இழக்கச்செய்வது.
அசல்சிந்தனையாளர்களின் இயல்பை நான் இப்படிச்சொல்கிறேன். அவர்களின் சிந்தனையில் ஒருபகுதி நம்மை மனக்கிளர்ச்சி அடையச்செய்யும். பெரும் கனவுகளையும் இலட்சியங்களையும் நம்முள் நிறைக்கும். இன்னொருபகுதி நம்முள் இருக்கும் சிந்தனைகளை உடைத்துச் சிதறடித்து நம்மை வெறுமையில் கொண்டு சென்று விடும். அந்தத் துண்டுகளைப் பொறுக்கி நாமே நம் அகத்தைத் திரும்பக் கட்டி எழுப்பவேண்டும்.
அசல்சிந்தனையாளர்களின் சிந்தனைகளில் ஒரு பகுதி நமக்கு கேனத்தனமாகத் தோன்றும். பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் வெற்றுப்பிடிவாதமாகவும் தோன்றும். இன்னொரு பகுதி நமக்குக் கொஞ்சம் கூடப் புரியாததாக இருக்கும். வெறும் உளறலா என்றுகூடத் தோன்றும். இதற்கு விதிவிலக்கான அசல்சிந்தனையாளர்களே இல்லை.
இந்த அம்சம்தான் அந்தச் சிந்தனையாளரை நாம் எளிதில் தாண்டிவிட முடியாதபடி செய்கிறது. ‘இதென்னடா இது’ என்று நாமே அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். பல கோணங்களில் அதைப் பரிசீலிக்கிறோம். அதாவது நமக்குள் அவர்களின் சிந்தனைகளில் ஒருபகுதி செரிக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது. நம் மனம் அந்தச் சிந்தனைகளை செரிக்கப் போராடிக்கொண்டே இருக்கிறது.
காந்தியிடம் இந்த இயல்பு உண்டு. காந்தியைப்பற்றிப் பேசும்போது என்னிடம் காந்தியவாதியும் மாபெரும் கட்டிடக்கலைஞருமான லாரி பேகர் சொன்னார் ‘அவருக்கு எரிச்சலூட்டுவதில் பெரிய ஆனந்தம் உண்டு. நாம் எரிச்சல் கொண்டால் அவர் முகத்தில் ஒரு புன்னகை வரும்.’
பின்பொருமுறை காந்திகிராம நிறுவனரான ராமச்சந்திரன் சொன்னார் ‘அனேகமாக காந்தியின் எல்லா சீடர்களும் காந்திமீது ஒருபோதாவது கடும் கோபம் அடைந்திருப்பார்கள். அவர் முன் கணக்குகளை வீசி எறிந்துவிட்டு இனிமேல் உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிக் கிளம்பிச்சென்றவர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை அவரை நிராகரித்துவிட்டு சபர்மதியில் இருந்து கிளம்பி வந்தேன்.’
காந்தியிடம் இருந்த அந்த அம்சம் என்ன? அவரை அணுகிய எவருமே நிம்மதியாக இருந்ததில்லை. அவர்களை காந்தி கலைத்துக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்தபோது அவரது சமூகத்துக்கும் அவரது சூழலுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தார். ஒருகட்டத்தில் அடிப்படைவாதிகள் அவரைக் கொல்வதற்கும் அவர் அளித்த எரிச்சல்தான் காரணம்.
அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தை காந்தி அமைத்தார். அன்றைய குஜராத் சாதிவெறியில் ஊறிய பழைமைவாத நகரம். அங்கே தன் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டார், அவர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவர் உணவையும் சமைக்கவும் அனைத்துக் கழிப்பறைகளையும் சுத்தம்செய்யவும் சொன்னார். சரி, அது அவரது கொள்கை. ஆனால் ஆசார இந்துக்கள் ஆசிரமத்துக்கு நன்கொடை தரவேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
காந்தி எழுதுகிறார், இந்த ஆசிரமம் இந்துக்களை சீர்திருத்தும் நோக்கம் கொண்டது. ஆகவே இந்துக்கள்தான் இதற்குப் பணம்தரவேண்டும். அது அவர்களின் கடமை. அவர்கள் தராவிட்டால்? பட்டினிகிடந்து சாகவேண்டும், அவ்வளவுதான். என்னதான் எரிச்சலூட்டினாலும் கண்ணெதிரே ஒரு சாத்வீக கும்பல் பட்டினி கிடப்பதை சகிக்க முடியாமல் வேறுவழியில்லாமல் அதே குஜராத் ஆசாரவாத இந்து சமூகம் அவருக்கு நிதி கொடுத்தது. அதை மகிழ்ச்சியுடன் தன் சுயசரிதையில் காந்தி பதிவுசெய்கிறார்.
இதுதான் திமிர்! நான் இதை அறத்திமிர் என்பேன். ஞானத்திமிர் என்பேன். இந்தத் திமிர்தான் அவரது உயிரைப் பறித்தது. நண்பர்களே, புனிதமான திமிர் இது. சிந்தனையாளன் ஒருவன் தன் ஆன்மாவை நெருப்பாக எரித்துப் பேணிக்கொள்ளவேண்டிய திமிர் இது. இன்று காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்.
நீங்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு சிந்தனையாளராக அறிந்திருக்க மாட்டீர்கள். அவரது அரசியல் போராட்டம் பற்றிய ஒரு பள்ளிக்கூட பாடப்புத்தகம் சார்ந்த அறிமுகம் மட்டும்தான் உங்களிடம் இருக்கும். அதை வைத்தே அவர்மீதான எல்லா விமர்சனங்களையும் உருவாக்கியிருப்பீர்கள். காந்தி கிட்டத்தட்ட எழுபதாயிரம் பக்கங்கள் எழுதியவர். உலக சிந்தனையாளர்களில் மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர்.
காந்தியின் சிந்தனைகள் அரசியல் மதம் சமூகம் போன்ற தளங்களில் மட்டுமல்லாமல் இலக்கியம், கட்டிடக்கலை, மருத்துவம் என பலதளங்களில் பரவிக்கிடக்கின்றன. இன்றைய நூற்றாண்டின் மையச்சிந்தனையோட்டமாக உள்ள சூழியல், தாக்குப்பிடிக்கும் பொருளியல், இயற்கைவேளாண்மை ஆகியவற்றுக்கான அடிப்படைகளை அமைத்த முன்னோடி அவர். இத்தனைக்கும் அப்பால் அவரை நாம் மீண்டும் மீண்டும் புதிய தளங்களில் கண்டுபிடித்தபடியே இருக்கலாம்.
காந்தியின் சிந்தனைகளை சுருக்கமாக உங்களுக்குச் சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் அது எப்போதுமே அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளவே வழிவகுக்கும். எந்தச் சிந்தனையாளரையும் அவரது சிந்தனைகளை நேரடியாக வாசித்துப் பொருள்கொள்வதே சரியானதாகும்.
நான் சொல்ல வருவது, காந்தி நம்முடைய காலகட்டத்தின் சிந்தனையின் ஒட்டுமொத்த அமைப்பில் உருவாக்கும் ‘கொந்தல்’களைப்பற்றி. அந்தக்கொந்தல்களை அவர் செய்யக் காரணமானது என்ன? நான் சிந்திக்கிறேன், என்னுடைய சிந்தனையில் இதுவே சரி என்ற ஆன்மீகமான திமிர்தான் இல்லையா?
ஒட்டுமொத்த மானுடச்சிந்தனைக்கும் மறுபக்கமாக, ஒட்டுமொத்த சமகாலச் சிந்தனைக்கும் எதிர்விசையாக தன்னை நிறுத்திக்கொள்ளத் தூண்டுவது இந்தத் திமிர்தான். இந்தத் திமிர் இருந்தமையால்தான் காந்தி அடக்கத்தின் உருவாக இருந்தார். நாம் எதில் எல்லாம் அகங்காரம் கொள்கிறோமோ அனைத்தையும் அவர் துறந்தார். எங்கும் எவர் முன்னும் தணியவும் பணியவும் தயாராக இருந்தார். ஆனால் மானுட வரலாற்றின் முன்னால் மட்டும் நிமிர்ந்து நின்றார்.
காந்தியின் அந்தப் புனிதமான திமிரை அவரது ஒவ்வொரு செயலிலும் நாம் காணலாம். ஒருமுறை வைஸ்ராயுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நேரத்தில் காந்தி தலைக்குக் களிமண் பத்து போட்டிருந்தார். அவரே அவருக்குச் செய்துகொண்ட சிகிழ்ச்சைமுறைகள் அவை. அந்தக் களிமண் பத்துடன் கிளம்பி வைஸ்ராய் மாளிகைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
விசித்திரமாகத் தோன்றலாம். அதிலும் ஒரு சரியான டை கட்டாவிட்டால் வெள்ளைக்காரன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்றே எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் இது கிறுக்குத்தனமாகவே தோன்றலாம். ஆனால் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த இந்தியத்தலைவரை விடவும் வெள்ளையர்களின் சம்பிரதாயங்களை அறிந்தவர் காந்தி. அவரது அந்தச்செய்கைக்குப்பின்னால் உள்ளது அபாரமான ஒரு சுய உணர்வு.
‘நான் காந்தி. இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் பிரதிநிதி. நான் நீ நினைக்கும்படி வரமுடியாது. நான் நினைக்கும்படித்தான் இருப்பேன்’ என்ற பிரக்ஞை அளித்த தன்னம்பிக்கை அது. ‘என்னுடைய சிந்தனைகளும் என் வழிமுறைகளும் உன்னுடைய அங்கீகாரத்தால் நிலை நிற்பவை அல்ல. அவற்றுக்குச் சொந்தமாக வரலாறுண்டு’ என்னும் சவால் அது.
ஆச்சரியம் என்னவென்றால் பிரிட்டிஷ்காரர்களின் எல்லா ஆசாரமரியாதைகளையும் பயபக்தியுடன் கடைப்பிடித்த இந்தியத்தலைவர்களை பிரிட்டிஷார் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் காந்தியை மட்டுமே மதித்தார்கள். இன்று அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் மற்றும் ராஜதந்திரிகளின் அந்தரங்கக் குறிப்புகள் பிரசுரமாகின்றன. அவையெல்லாம் அவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பையே காட்டுகின்றன.
அந்தத் திமிரை சிந்தனையின் தற்சார்பு என்று நான் வரையறை செய்வேன். காந்தியை காந்தியாக்கியது அதுவே. காந்தியின் எல்லா சிந்தனைகளையும் புரிந்துகொள்வதற்கான முதல் தொடக்கமாக இருக்கவேண்டியது அவரது இந்தத் தற்சார்பைப்பற்றிய நம் புரிதலே.
இன்றைய உலகச்சூழலில் நீங்கள் உங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றால் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடமே இதுதான். நீங்கள் வழிநடத்துபவரா பின்பற்றுபவரா என்ற கேள்விதான் முதன்மையானது. பின்பற்றுபவர் என்றால் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கி நான் பேசவில்லை. வழிநடத்துபவர் என்றால் முதன்மையாக உங்களுக்கு வேண்டிய தகுதியே இதுதான்.
இன்று உலகிலுள்ள கோடானு கோடிபேர், இந்தியாவிலும் சீனாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலகோடி இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒரே கல்வியைக் கற்கிறார்கள். ஒரேவகையான உலகப்புரிதலை அந்தக் கல்வி அவர்களுக்கு அளிக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலையில் இருந்து ஒரே வகையான உற்பத்திப் பொருட்களாக வெளியே வருகின்றனர். நீங்களும் அதில் ஒருவர். உங்களுக்கென எந்த சுயசிந்தனையும் இருப்பதில்லை. சுய அடையாளமும் இருப்பதில்லை.
உண்மையில் நீங்கள் சுயமாகச் சிந்திப்பதாக நினைப்பதெல்லாம் அதேபோல கிட்டத்தட்ட அதே சொற்களில் உலகம் முழுக்க மற்ற அத்தனை பேரும் நினைப்பதுதான். நேரமிருந்தால் இணையத்தில் தேடிப்பாருங்கள்: நீங்கள் நினைப்பதை எல்லாம் எல்லாருமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். கருத்துக்கள் மட்டும் அல்ல. உணர்ச்சிகள் கலாய்ப்புகள், நக்கல்கள் கூட உலகம் முழுக்க ஒரேமாதிரி இருக்கின்றன.
ஆனால் நீங்கள் அந்தப் பொதுமையை மீறி உங்களுக்கென எதையாவது உருவாக்கிக் கொண்டால் அதுதான் உங்கள் சுயம். அப்படி உருவாக்கிக்கொண்ட சுய அடையாளம் மூலமே நீங்கள் உங்களால் மட்டுமே இந்த சமூகத்துக்குக் கொடுக்கவேண்டிய பங்களிப்பைக் கொடுக்கமுடியும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் உங்களுக்கான இடம் உருவாகும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருக்கலாம். தொழில்முனைவோராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். யாராக இருந்தாலும் இதுதான் விதி.
காந்தி முறையான உயர்தரக் கல்வியைப் பெற்றவர். அவரது காலகட்டத்தில் கிடைக்கும் மிக உச்சகட்டக் கல்வி அது. அந்தக்கல்வியைக் கற்ற அனைவருமே செல்லக்கூடிய ஒரு பொதுவழி உண்டு. ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பிய நாகரீகம் ஆகியவற்றை மானுடத்தின் உச்சகட்ட சாதனையாக நினைப்பது. உலகமே பின்பற்றியாகவேண்டிய முன்னுதாரணமாக நினைப்பது. உலகத்தை முழுக்க அதனடிப்படையில் மாற்றியமைக்க முயல்வது.
அந்தப் பொதுப்போக்கில் காந்தி இணையவே இல்லை. காந்தியை காந்தியாக ஆக்கியது அந்தப் பிடிவாதமான தற்சார்புதான். அவரைப்போல ஐரோப்பியக் கல்வி கற்ற அத்தனைபேரும் நவீன ஐரோப்பியப் பண்பாட்டை அறிமுகம் செய்துகொண்டதுமே அவர்களின் அதுவரையிலான வளர்ப்பில் இருந்து பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தூக்கி வீசினார்கள். புதியதாகக் கல்லூரிக்கு வேட்டியுடன் படிக்க வரும் கிராமத்து மாணவன் அடுத்த வாரமே கிழிந்த ஜீன்ஸ் போட்டு ஒற்றைக்கம்மல் அணிந்துகொண்டு வருகிறானே அதைப்போல.
காந்தி அதைச் செய்யவில்லை. அவர் அவருக்கு அவருடைய இளமைப்பருவத்தில் இருந்தும் அவர் வாழ்ந்த சூழலில் இருந்தும் கிடைத்த பண்பாட்டையும் சிந்தனைகளையும் கைவிட மறுத்தார். கைவிடவேண்டும் என்றால் உரிய முறையில் என்னை நீங்கள் அவை பிழை என்று ஏற்கச்செய்யவேண்டும் என்றார். ‘நான் ஒரு கீழைநாட்டவன், ஓர் இந்தியன், ஓர் இந்து. எனக்கென்று பல்லாயிரம் வருடப் பழைமைகொண்ட ஒரு பண்பாட்டுமரபு இருக்கிறது. அதில் பிறந்து வளர்ந்த நான் இதுவரையிலான என் சொந்தவாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்கள் உள்ளன. நான் அவற்றைக் கைவிடவேண்டுமென்றால் எனக்கு அவற்றின் குறைபாடுகளை நீங்கள் ஐயம்திரிபற விளக்கவேண்டும். அவற்றைவிட மேலான ஒன்றை அளிக்கவேண்டும்’ என்று அவர் அடம்பிடித்தார்.
காந்தியின் சுயசரிதை முழுக்க அவரிடம் இந்தப் பிடிவாதம் இருப்பதைக் காணலாம். சைவ உணவுப்பழக்கம், சாதிமுறை எல்லாவற்றைப்பற்றியும் அவர் இதேபோன்ற உறுதியான முடிவுடன் இருக்கிறார். அன்று லண்டனுக்கு வரும் ஒரு இந்தியர் பத்தே நாளில் சைவ உணவைக் கைவிடுவார். இந்தியச்சாதிமுறை, மதநம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்துப் பேச ஆரம்பிப்பார். ஊர்திரும்பினாலும் அவர் லண்டன்வாசியாகவே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் சொந்தவாழ்க்கையில் அந்தப் பேச்சின் எந்தச் சாயலும் இருக்காது.
ஆனால் காந்தி அசைவ உணவு உண்டால்தான் நன்றாக வாழமுடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று அனைவரிடமும் வாதிட்டார். கிட்டத்தட்ட உயிரைப்பணயம் வைத்து சைவ உணவை உண்டார். அதேபோல இந்தியச் சாதியமைப்பு முழுக்க முழுக்க அநீதியின்மீது கட்டப்பட்டதாக இருக்க நியாயமில்லை, அப்படியென்றால் அது இத்தனைநாள் நீடித்திருக்காது, அதற்கு ஒரு பொருளாதாரப் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னார்.
தன்னுடைய சொந்த அனுபவத்துக்குள், தன்னுடைய மரபுக்குள் செல்லுபடியாகக்கூடிய சிந்தனைகள் மட்டுமே தனக்குத்தேவை என கறாராக இருந்தார் காந்தி. ஆனால் மூர்க்கமான பழைமைவாதியாக இருக்கவும் இல்லை. தன்னை ஒரு சிந்தனை ஏற்றுக்கொள்ளச் செய்தால் அதை முழுமூச்சுடன் ஏற்றுக்கொள்ளவும் அதை கடைசிவரை தீர்க்கமாகப் பின்பற்றவும் அவர் தயங்கவில்லை. உதாரணமாக, அவரால் கடைசிவரை அசைவ உணவுப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் இந்தியச் சாதியமைப்பு முழுக்கமுழுக்க தீங்கானது, தேவையற்றது, ஒழிக்கப்படவேண்டியது என்ற முடிவுக்கு வந்தார். அதை சொந்தவாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் பின்பற்றினார்.
இதுதான் தற்சார்பு. காந்தியின் எல்லாச் சிந்தனைகளையும் இந்த அம்சம் தீர்மானிக்கிறது. உலகமே ஒன்றைச் சிந்தித்தாலும் காந்தி அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. ‘அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள். என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உலகம் என்ன சொன்னாலும் நான் என் அந்தராத்மா சொன்னபடித்தான் நடப்பேன்’ என்ற வரியை காந்தியின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.
காந்தியின் காலகட்டத்தில் உலகம் முழுக்க ஓங்கியிருந்த இரண்டு நம்பிக்கைகள் என்றால் ஒன்று தொழில்நுட்பம் உலகத்தைக் காப்பாற்றும் என்ற எண்ணம்,இரண்டு, சமூக மாற்றத்துக்கு வன்முறை இன்றியமையாதது என்ற எண்ணம். இன்றும்கூட நம்மில் மேலோட்டமாக சிந்திப்பவர்களிடமிருப்பது இந்த நம்பிக்கைகள்தான்.
காந்தி இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் அதன் அதிதீவிர வளர்ச்சியைக் கண்டுகொண்டிருந்த லண்டனில் வாழ்ந்தவர். அன்று லண்டனுக்குச் செல்பவர்கள் எல்லாருமே அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்து அது இன்னும் சில வருடங்களில் உலகுக்கே சோறும் சமாதானமும் கொண்டுவரும் என்று நம்பினார்கள். காந்தியின் முதல்சீடரான நேருவே அந்த நம்பிக்கைதான் கொண்டிருந்தார், கடைசிவரை.
ஆனால் காந்தி தொழில்நுட்பம் வெறும் கருவிதான் என்று நினைத்தார். அந்தக்கருவி யாரால் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதென்பதே முக்கியமானது. அந்த உயர்தொழில்நுட்பம் தொழிலாளர்களை மிருகங்களிலும் கீழான அடிமைவாழ்க்கை வாழ்வதற்கே கொண்டு செல்கிறது என்பதை அவர் கவனித்தார். நவீனத்தொழில்நுட்பம் உலகிலுள்ள ஆதிக்கசக்திகளுக்கு இன்னும் அதிகமான ஆயுதவலிமையை அளிக்கும் என்றும் உலகளாவிய சுரண்டலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்தார்.
தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்குகிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி வாதாடினார்.
1909-லேயே காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யம் என்ற நூலில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்திருந்தார். அன்று உலகில் எங்கும் சூழியல் என்ற சிந்தனை வரவில்லை. தாக்குப்பிடிக்கும் பொருளியலை எவரும் அறிந்திருக்கவில்லை. இயற்கைச்சமநிலை பற்றிய எண்ணமே இருக்கவில்லை.
மாறாக இயற்கையை ஒரு அடிமையாகவே அன்றைய சிந்தனையாளர்கள் நினைத்தார்கள். இயற்கையை ஒட்டச்சுரண்டி மனிதன் தன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். இயற்கை மனிதனுக்காகவே என்று வாதிட்டார்கள். நுகர்வே மனிதனின் இன்பம் என்றார்கள். அதிக நுகர்வே வளர்ச்சி என்று வகுத்தார்கள். மார்க்ஸிய சிந்தனையின் சாராம்சமே இந்த மனிதமைய வாதம்தான். உலகின் பெரும்பாலான இயற்கை வளத்தை அழித்தவை, அழித்துக்கொண்டிருப்பவை மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அரசுகளே.
நூறாண்டுகளுக்கு முன் ‘வளர்ச்சி’ என்றாலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றுதான் உலகமெங்கும் நம்பப்பட்டது. அதாவது இயற்கை என்ற சக்தியை மனிதன் வெல்வதே வளர்ச்சி. இயற்கைச்சக்திகளுடன் மனிதன் போர் செய்வதை அன்றைய இலக்கியமும் தத்துவமும் கொண்டாடின.
அச்சூழலில் காந்தி எப்படி அணுகப்பட்டிருப்பார். யோசித்துப்பாருங்கள். அவர் ஒரு பழைமைவாதியாக, நவீன உலகத்தைப் புரிந்துகொள்ளாத கிறுக்கராக எண்ணப்பட்டார். காந்தியைச் சுற்றி இருந்த ஐரோப்பியக்கல்வி பெற்ற அரசியலாளர்கள் காந்தியின் அபாரமான மக்கள்செல்வாக்கைக் கண்டுதான் அவருடன் இருந்தார்கள். உள்ளூர அவர்கள் அந்த அரைநிர்வாணக் கிழவருக்கு நவீன சிந்தனைகள் புரியவில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகின் கண்கள் திறந்தன. நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுத்தன்மையைப்பற்றிய எண்ணம் உலகமெங்கும் உருவாயிற்று. அது ஒரு ஆக்கசக்தி என்ற எண்ணம் மறைந்தது. அதன்பிறகுதான் உலகம் மெல்ல மெல்ல காந்தியை நோக்கி வர ஆரம்பித்தது. அப்போது காந்தி இல்லை, அவரது சிந்தனைகள் மட்டும்தான் இருந்தன.
காந்தி தொழில்நுட்பம் பற்றியும், இயற்கையின் சமநிலை பற்றியும், தாக்குப்பிடிக்கும் உற்பத்திமுறை பற்றியும் பேசிய விஷயங்களை நவீன ஐரோப்பியச் சிந்தனையின் மொழியைப் பயன்படுத்தி விரிவாக விளக்கியவர் என்று பிரிட்டிஷ் பொருளியலாளரான இ.எஃப்.ஷுமாக்கர் [E.F.Schumacher]-ஐச் சொல்லலாம். அவரது சிந்தனைகள் வழியாக ஐரோப்பா முழுக்க நவீனத் தொழில்நுட்பமும் லாபவெறியும் உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்ற விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்தது.
அதன்பின் பல சிந்தனையாளர்களைச் சொல்லமுடியும். நான் முக்கியமாக அமெரிக்கச் சிந்தனையாளரான இவான் இலியிச்சைச் சுட்டிக்காட்டுவேன். ஷுமாக்கரும் இவான் இலியிச்சும் இந்தியாவுக்கு வந்து, ஏன் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் காந்திகிராமத்திலும் டி.கல்லுப்பட்டியில் ஜெ.சி.குமரப்பாவுடனும் தங்கி காந்தியைப்பற்றி ஆராய்ந்தவர்கள். இங்கிருந்து சென்று உலகை நோக்கிப் பேசியவர்கள். நாம் அப்போது காந்தியைப் பழைய கிழவர் என்று ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய நவீனத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதில் தீவிரமாக இருந்தோம்.
இன்று உலகம் முழுக்க உள்ள பசுமை இயக்கங்களின் பிதா காந்திதான். அவரே விதை. இன்றைய உலகின் சிந்தனை என்று எதையாவது சொல்லமுடிந்தால் அது சூழியல்தான். டேவிட் அட்டன்பரோவின் இயற்கைபற்றிய ஆவணப்படங்களைப் பார்க்காதவர்கள் உங்களில் சிலரே. அவர் தன் ஆவணப்படங்கள் வழியாக முன்வைப்பவை ஐரோப்பிய பசுமைச்சிந்தனைகளைத்தான். அவை நம்மிடமிருந்து, காந்தியிடமிருந்து சென்றவை.
காந்தியின் சிந்தனைகள் 1972-இல் ஸ்டாக்ஹோம் சூழியல் மாநாட்டுக்குப் பின்னர்தான் உலகமெங்கும் சூழியலாளர்களால் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்பட்டன. ஆம், காந்தி 1909-இல் சொன்னவை அரைநூற்றாண்டுக்குப் பின்னரே உலகத்தால் உணரப்பட்டன.
காந்தி நவீன காலகட்டத்தில் வன்முறைமூலம் சமூகமாற்றமோ ஆட்சிமாற்றமோ வரமுடியாதென்று நினைத்தார். வன்முறை அதற்குச் சமானமான எதிர்வன்முறையைத்தான் உருவாக்கும் என்று சொன்னார். வன்முறை எதற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அழிவுதான் மிஞ்சும், அதுவும் எளிய மக்களுக்கு அழிவுதான் கிடைக்கும் என்பதே காந்திய தரிசனம்.
ஆகவேதான் காந்தி முன்வைத்த மக்கள்போராட்டம் என்பது அகிம்சை வழியிலானதாக இருந்தது. அகிம்சை [வன்முறையின்மை] என்பது காந்திய சிந்தனைகளின் அடிப்படை. காந்தியின் காலகட்டத்தில் உலகமே ஆயுதப்புரட்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் ஆட்சிமாற்றத்துக்கான வன்முறைக் கிளர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
ஆனால் காந்தி பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சமூகத்தில் உள்ள அதிகாரம் அதன் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தை மாற்றினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மாற்றவேண்டியது மக்களை. மக்கள் கருத்து மாறினால் இயல்பாகவே ஆட்சியும் அதிகாரமும் மாறும். அதுவே உண்மையான மாற்றம். அந்த மாற்றமே நீடிக்கும். பிற மாற்றங்கள் எல்லாமே அழிவைத்தான் உருவாக்கும்.
காரணம் அந்தமாற்றம் மக்களில் ஒரு சிறுபான்மையினர் அரசாங்கத்தை எதிர்த்துச் செய்யும் போராகவே இருக்கும். அவர்கள் வென்றால் அவர்கள் இன்னொரு அரசாங்கமாக ஆவார்கள். மக்கள் அப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
ஜனநாயக யுகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றார் காந்தி. மக்கள் போராட்டம் என்பது மக்களின் கருத்தைத் திரட்டி அதை ஒருமுகப்படுத்துவதற்கான செயல்பாடு மட்டும்தான். ஒருகுறிப்பிட்ட கருத்தை ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதன்பின்னர் அந்தச் சமூகம் மாறியே ஆகவேண்டும்.
காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் எல்லாமே இந்திய மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள்தான். இந்திய மக்கள் பிரிட்டிஷாரை நம்பி ஆட்சியாளர்களாக ஏற்றிருந்தார்கள். ஆகவேதான் சிறுபான்மையினரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆளமுடிந்தது. மக்களுக்கு பிரிட்டிஷார் இந்தியாவில் செய்த பெரும் சுரண்டலைப் புரிந்துகொள்ளும் சக்தி இருக்கவில்லை. அந்தச்சுரண்டலால் உலகிலேயே மிகப்பெரும் பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன. இந்தியாவின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் இறந்தனர். அதுவும் மக்களுக்குத் தெரியவில்லை.
காந்தி நடத்திய எல்லாப் போராட்டங்களும் இந்தச் சுரண்டலை மக்கள் மத்தியில் திறந்து வைப்பதற்கான போராட்டங்கள்தான். அன்னியத்துணி துறப்பு, உப்பு சத்யாக்கிரகம் எல்லாமே இந்த நோக்கம் கொண்டவை. மெல்ல மெல்ல மக்கள் பிரிட்டிஷாரைப் புரிந்துகொண்டபோது வேறு வழியே இல்லாமல் அவர்கள் வெளியேற நேர்ந்தது. இப்படித்தான் மக்கள் போராட்டம் நிகழமுடியும்.
அன்றும் பிறகும் வன்முறைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் காந்தியை எள்ளி நகையாடினார்கள். அவரை துரோகி என்றும் மக்கள் போராட்டம் நிகழாமல் காட்டிக்கொடுப்பவர் என்றும் வசைபாடினார்கள். அனால் 1950 வாக்கில் ருஷ்யாவில் ஸ்டாலின் நடத்திய வெறியாட்டங்கள் குருஷேவ் வழியாக அதிகாரபூர்வமாக வெளிவர ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைப்போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் உலக சிந்தனையாளர்களிடம் சரிய ஆரம்பித்தன. வன்முறைப்போராட்டம் வழியாக சர்வாதிகாரத்தை மட்டுமே கொண்டுவர முடியும் என்றும் நோயைவிட சிகிழ்ச்சை ஆபத்தானதாக ஆகலாம் என்றும் தெரிய ஆரம்பித்தது.
காந்தி அதன்பின்னரே உலக அளவில் கவனிக்கப்படலானார். வன்முறையற்ற ஜனநாயகப் போராட்டம் பற்றிய அவரது சிந்தனைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் எழுபதுகளின் தொடக்கத்தில் இத்தாலிய மார்க்ஸிய சிந்தனையாளரான அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அவை ஒரு சமூகத்தின் உண்மையான அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லை என்று நிறுவின. அந்த அதிகாரம் அந்தச் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் உள்ளது. அந்த மக்கள் எதை நம்புகிறார்களோ அந்தக் கருத்துதுதான் அதிகாரமாக ஆகிறது. அதை கிராம்ஷி கருத்தியல் மேலாதிக்கம். [Hegemony] என்கிறார்.
ஆகவே ஒருசமூகத்தில் உண்மையான மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் அந்த மக்களின் கருத்தியலில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் உண்மையான புரட்சி என்றார் கிராம்ஷி. அவ்வாறு கருத்தியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக நீண்ட கால அளவில் கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்படும் போராட்டத்தை அவர் நிலை யுத்தம் [Static war] என்றார். தற்காலிக சமரசம் என்பது அந்த நிலையுத்தத்தின் ஒரு பகுதியே.
கிராம்ஷிக்குப் பின்னர்தான் காந்தியை மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். இன்று காந்தியம் பற்றி மேலைநாட்டுச் சிந்தனையாளர் எழுதும் கட்டுரைகளில் கிராம்ஷியின் கலைச்சொற்களை நிறையவே காணலாம்.
சென்ற அரைநூற்றாண்டில் உலக அரசியலில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள் எல்லாமே காந்தியை ஆதர்சமாகக் கொண்டவர்களால் காந்திய முறையில் அடையப்பட்டவைதான். வன்முறைமூலம் அடையப்பட்ட எல்லா மாற்றங்களும் சீரழிந்து இன்னும் மோசமான விளைவுகளையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காந்திய வழியின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணம் நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவில் பெற்ற வெற்றி. மிகச்சிறந்த உதாரணமாக வரப்போவது ஆங் சன் சூசி பர்மாவில் பெறப்போகும் வெற்றி.
நண்பர்களே, நான் சொல்ல விழைவது இதுதான். காந்தி அவரது காலகட்டத்துக்கு வெகுவாக முன்னால் நடந்தவர். அவரது காலகட்டத்தில் புரிந்துகொள்ளப்படாதவர். கிண்டலுக்கும் வசைகளுக்கும் உள்ளானார். அவரது காலகட்டத்தில் எல்லாராலும் நம்பப்பட்டதைத் துணிவுடன் நிராகரித்தவர். எது தனக்கு உண்மையாகப்படுகிறதோ அதைத் தயங்காமல் முன்வைத்தவர். அந்தத் தற்சார்பினால்தான் அவர் உலகசிந்தனைக்குப் பெரும் பங்களிப்பை அளித்தார். இன்று அதுதான் அவரது அடையாளம்.
அந்தத் தற்சார்பைத்தான் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஞானத்திமிரைத்தான் நாம் அடையவேண்டியிருக்கிறது. வரலாற்றின் முன்னால் நிமிர்ந்து நிற்பது எப்படி என்பதுதான் நமக்குத்தெரியவில்லை. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியர்களாகிய நாம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். நாம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வழிபடுகிறோம். அவர்களின் பண்பாட்டை நகல் செய்கிறோம்.
நம்முடைய பாடநூல்கள் எல்லாமே வெறும் மொழியாக்கங்கள். நம் சிந்தனைகள் எல்லாமே கடன் வாங்கியவை. நம்முடைய அரசியல் கொள்கைகள் எல்லாமே போலியானவை. நாம் இன்று உள்ளீடற்ற ஒரு சமூகம்.
ஆகவேதான் உலகின் மிகப்பிரம்மாண்டமான நாடாகிய நமக்கு இன்று எங்கும் எந்த மதிப்பும் இல்லை. எந்தத் துறையிலும் நம்முடையது மட்டுமான எந்தப் பங்களிப்பும் இல்லை. நாம் அதிகபட்சம் செய்வதெல்லாமே தகவல்தொழில்நுட்ப குமாஸ்தா வேலைதான். யாரோ உருவாக்கிய வரைபடத்தை செங்கல் போட்டு நிரப்பும் வேலை மட்டுமே நம்மால் முடிந்தது.
ஆகவேதான் நம் இளையதலைமுறைக்கு காந்தி முக்கியம். வெள்ளையனை நகல் செய்த சிந்தனையாளர்களும் தலைவர்களுமல்ல, தன் ஆன்மீகத் திமிருடன் அரைநிர்வாணக்கோலத்தில் உலகை நோக்கி நின்ற காந்தி, உலகசிந்தனையைக் கொந்தி உடைத்த காந்திதான் நமக்கான ஆதர்சம்.
மீறிச்செல்லுங்கள். தனித்து நில்லுங்கள். கடைசிவரை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளாததைப் பிறருக்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். கடைசிவரை நீங்கள் நம்புவதை முன்வைக்க அஞ்சாதீர்கள்.
காந்தியின் கையில் இருந்த கோடரி அந்தத் தற்சார்புதான். அந்தக் கோடரியால் அவர் நம்முள் உள்ள மரபான சிந்தனையைக் கொந்துகிறார். அவரிடமிருந்து உங்கள் கோடரிகளைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த உடைவுகளை நீங்கள் நிகழ்த்துங்கள்.
அசல்சிந்தனை என்பது நெருப்பு. அது முடிந்த இடங்களில் எல்லாம் பற்றிக்கொள்ளக்கூடியது. காந்தி ஒரு நெருப்பு. உங்களிலும் அவர் படரட்டும்.
நன்றி.
[9-4-2012 அன்று புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறையில் ஆற்றிய உரை]

தொடர்புடைய பதிவுகள்

No comments: