Sunday 16 February 2014

நாடார்கள் எப்படி ”சமூகநீதி “ பெற்றார்கள்?


நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் ஜாதியும் கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட ஜாதி தான்.. கோவிலுக்குள் விட மாட்டார்கள்.. தலையில் துண்டு கட்ட அனுமதியில்லை. செருப்பு போட அனுமதி இல்லை. சில தெருக்களில், ஏன், நீர் நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு. அவ்வளவு ஏன், நாடார் குல பெண்கள் தங்களின் மார்பை கூட மறைக்க முடியாது. அவ்வளவு தூரம் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை. ஆனால் இன்று அவர்கள் வளர்ந்து வந்திருக்கும் நிலை ஊர் அறிந்த விசயம். எப்படி இந்த வளர்ச்சி?

ஒவ்வொரு ஊரிலும் சிறு குழுவாக ஒன்றிணைந்தார்கள். ஒற்றுமையாக உழைத்தார்கள். தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை அந்த குழுவிற்கு கொடுத்தார்கள். அதை மகமை பண்டு என்றார்கள். தொழில் தொடங்கினார்கள். அந்த தொழிலுக்கு பண உதவி தேவையென்றால் மகமை பண்டில் இருந்து கொடுத்து உதவினார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சமூகம் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட ஆரம்பித்தது. பொருளாதாரம் முன்னேறும் போது அங்கீகாரமும் வந்து தானே ஆக வேண்டும்? சமுதாயத்தில் ஒதுக்கியன் எல்லாம் ஒன்றாக சேர ஆரம்பித்தான்.

எந்த கோவிலுக்குள் எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டதோ அந்த கோயில்களுக்கெல்லாம் மகமை பண்டுவில் இருந்து பணத்தை வாரி இறைத்தார்கள். கோயில் கதவுகள் திறந்தன. ஒரு காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட அதே நாடார் ஜாதி தான் இன்று அந்த கோயிலில் பல முக்கிய பொறுப்பை வகிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடங்க மறு, அத்து மீறு, திரும்ப அடி என்று அவர்கள் பிறர் மீது துவேசத்தை வளர்க்கவில்லை. சமுதாய அங்கீகாரம் பெற, யார் வீட்டு பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடவில்லை. மேடை மேடையாக ஏறி “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்” என்று புலம்பவில்லை. வன்முறையை தூண்டவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உணர்ந்திருந்தார்கள். பொருளாதாரா வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சி என்பது தான் அது. அமைதியாக, ’தான் முன்னேற என்ன வழி?’ என்பதை நோக்கி ஓடினார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.

இன்று தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக இருப்பவர்கள், பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லாமல், ஜாதி அரசியல் வியாபாரிகளின் பேச்சை கேட்டு இன்னமும் வன்முறைத்தனமாக பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருந்தால், எத்தனை காலமானாலும் நீங்கள் மேலே வரவே முடியாது. ஒற்றுமையாக பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் தன்னால் கிடைக்கும்.. அதற்கான கண்கண்ட சாட்சி தான் நான் மேல் சொன்ன ஜாதியினரின் வளர்ச்சியும் அங்கீகாரமும்..